கரூர்:தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் திமுக, அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர், செந்தில் பாலாஜி. அவர் அதிமுகவில் இருந்த போதும், திமுகவில் இணைந்த பின்பும், பரபரப்பாக பேசப்படும் அமைச்சராகவே வலம் வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக எழுந்த மோசடி புகார், நீதிமன்றம் வரை சென்று முடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை, கள்ளச்சாராய விற்பனையால் தமிழ்நாட்டில் நடக்கும் மரணங்கள் என கடந்த மாதம் முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், செந்தில் பாலாஜி பதவி வகித்து வரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில், அரசு மதுபான பார் நடத்த விடப்பட்ட டெண்டர் முறைகேடுகள் குறித்து பார் நடத்தும் உரிமையாளர்கள் வழங்கிய புகார்களால் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் என பலரும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இதற்காக நேற்று (மே 26) காலை 6 மணியளவில் கரூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கார்களில் வந்த 75க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் கடை ஆகியவற்றில் சோதனையிட முயன்றனர்.
இந்த தகவல் அறிந்து காலை 8 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் குவிந்த திமுகவினர், மோடி அரசின் கைக்கூலிகளாக வருமான வரித்துறை செயல்படுவதாகக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தக் கூட்டத்தில் கரூர் மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, திமுக மேயர் கவிதா உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு 200க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், ‘வீட்டை விட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் உடனடியாக வெளியே வர வேண்டும், இல்லாவிட்டால் அனைவரும் உள்ளே வருவோம்’ எனக் கூறி கோஷமிட்டனர். அப்போது தனது காரில் இருந்த கைப்பை ஆவணக் கோப்புகளை எடுப்பதற்காக வெளியே வந்த வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒருவரான காயத்ரி, காரில் இருந்த ஏதோ ஒரு ஆவணத்தை வீட்டுக்குள் வைப்பதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறி திமுகவினர் சத்தமிட்டனர்.
ஒரு கட்டத்தில் ஐடி அதிகாரி காயத்ரியின் கைப்பை, செல்போன் மற்றும் ஆவணக் கோப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டதால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பெண் அதிகாரி, திமுக தொண்டர் குமார் என்பவரை தாக்கியதாகக் கூறி அவசரம் அவசரமாக திமுக தொண்டர், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதன் பின்னர் பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருபுறம், மற்றொரு புறம் திமுக தொண்டர்கள் என நடுவில் சிக்கிக் கொண்ட வருமான வரித்துறை அதிகாரி காயத்ரியிடம், ‘ஐடி கார்டு எடு. எல்லாத்தையும் வெளிய வரச் சொல்லு. கேட்ட லாக் பண்ணு’ என்று ஒருமையில் பேசத் தொடங்கினர். இதனையடுத்து அங்கிருந்த மற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரியை மீட்க முயற்சி செய்தனர்.
இதனிடையே, இவை அனைத்தையும் கரூர் நகர காவல் ஆய்வாளர் மிதின் குமார் உள்ளிட்ட காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததால் கடுப்பான வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு விசாரணை அதிகாரியாக அதே காவல் ஆய்வாளர் மிதுன் குமார் இருந்ததால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க புறப்பட்டுச் சென்றனர்.