தொலைக்காட்சியில் நாப்கின் விற்பனைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நடித்திருக்கும் பெண் பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கிறார். 'ஓ... மாதவிடாய் இவ்வளவு ஜாலியா இருக்குமா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா?' ஆனால், யதார்த்தம் அப்படியில்லை. மாதவிடாயின் வலி தொடங்கி, அதற்கான நாப்கின் செலவுவரை பெண்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, சிலரை நாப்கினுக்குப் பதிலாக துணியைப் பயன்படுத்தப் பழக்கிவிட்டது. நாப்கின் வாங்கும் அளவிற்கு குடும்பப் பொருளாதாரம் இருப்பது தனக்கு நல்வாய்ப்பு என ஒரு பெண் குழந்தை நினைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு நாப்கின் இன்றியமையாததாக இருக்கிறது. இந்த அவலநிலையைப் புரிந்துகொண்டு பெண்களுக்கு உதவ முன்வந்துள்ளது, கரூர் மாவட்ட தனியார் தொண்டு நிறுவனம்.
குறிப்பாக, இந்தத் தொண்டு நிறுவனம், இளம்பெண்களுக்கு இலவச நாப்கின்களை வழங்கி துயர் நீக்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாப்கின்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் பயன்பெற்ற சில பெண்கள், இந்நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தன்னார்வலர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.
தனியார் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் ஒருவர், "கரோனா நெருக்கடியில் மக்கள் வேலையின்றி அல்லல்படுகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நாப்கினைப் பெறமுடியாமல், பெண்கள் திகைத்துள்ளனர்.
அவர்களுக்கு உதவும்விதமாக நாப்கினை இலவசமாக வழங்கிவருகிறோம். கரூர் மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் வளரும் இளம் பெண்களுக்கு அதிகமாக அளித்துள்ளோம்.