கரூர்: தான்தோன்றிமலை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர் (28). கால் டாக்ஸி ஓட்டுநர் இவருக்கு கடந்த வாரம் செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் whatsapp குழுவில் சுரேந்தர் இணைந்ததாகவும் இது தொடர்பாக சென்னை தாம்பரம் சைபர் கிரைம் குற்றப் பிரிவிலிருந்து விசாரணைக்கு புகார் தொடர்பாக அழைப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க 5ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பி வைக்க கூறியுள்ளனர். இதனை நம்பிய சுரேந்தர் 5ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், மேலும் கூடுதல் தொகை வேண்டுமென மிரட்டல் விடுத்ததால் சந்தேகமடைந்த சுரேந்தர், ‘ட்ரூ காலர்’ மூலம் அழைப்பு வந்த விவரங்களை ஆராய்ந்து பார்த்துள்ளார்.
அதில் பலரால் புகார் செய்யப்பட்ட ஸ்பாம் எண் (Spam) செய்த எண் என காட்டியுள்ளது. உடனடியாக இது குறித்து சுரேந்தர் கரூர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் விசாரித்தார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேந்தர், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட கரூர் மாவட்ட காவல் துறை இது தொடர்பாக அழைப்பில் வந்த செல்போன்கள் மற்றும் google pay எண் வங்கிக் கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்ததில், கோவையைச் சேர்ந்த கௌதம் சித்தார்த் (19), மாதவன் (19), சந்தன சொர்ணகுமார் (19), ஜான் பீட்டர் (19) என நான்கு இளைஞர்கள் கூட்டாக மோசடி செய்தது தெரியவந்தது.