கரூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மக்கள் கூடும் பகுதிகளில் நின்று யாசகம் கேட்பது போல நின்று வழிப்பறி செய்வது, ஆண்களை குறி வைத்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு விரட்டியடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டன.
இது சம்பந்தமாக கரூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளும் போது, ஒன்றாக கூடும் திருநங்கைகள் சிலர் காவல் துறையினருக்கு எதிராக அராஜக செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வந்தது. இதனிடையே இன்று (நவ.12) கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மினிபஸ் நிலையத்தின் கழிவறை அருகே இருந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து இரண்டு அரை பவுன் தங்கச் செயினை பறித்ததாக, கரூர் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் இசைப்பிரியா (24), ராகவி (22), தில்ஷிகா(23) இனியா(22) ஆகிய நான்கு பேரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, திருநங்கைகள் சிலர் காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கரூர் எஸ்பி உத்தரவின் பேரில் கரூர் அதிவிரைவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட திருநங்கைகளை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கரூர் நகர காவல் நிலையத்தின் முன்பு கரூர் மாவட்டத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடி போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் நகர காவல் நிலையத்தின் முன் பக்க கதவு திடீரென மூடப்பட்டது. பின்னர் கரூர் நகர் பகுதியில் உள்ள மற்ற திருநங்கை குழு தலைவிகளிடம் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து எடுத்துரைத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆதரவு கூறக்கூடாது என எடுத்துரைக்கப்பட்டது.