கரூர்: கரூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து திமுக அலுவலகத்தின் மீது கல் வீசி எறிந்தும்; சாணத்தைக் கொண்டு திமுக தலைவர்கள் படத்தை அழித்தும் இருக்கும் சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நேற்று இரவு அக்கட்சியினர் பல இடங்களில் நடத்திய போராட்டத்தை போலீசார் தடுத்தனர். இதனிடையே இன்று (நவ.2) அதிகாலை கரூர் புகழூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள திமுக நகர அலுவலகத்திற்குள் கற்களை வீசியும், அலுவலகத்தில் உள்ள விளம்பரப் பதாகைகளை கிழித்தும், பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் வரையப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் படங்கள் மீது மாட்டு சாணத்தை சில அடையாளம் தெரியாத நபர்கள் பூசியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் பலரும் காலை முதல் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, திமுக கட்சி அலுவலகப்பெயர் பலகையை சேதப்படுத்தியும், மேம்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் படங்களில் சாணி வீசியவர்களைக்கண்டித்தும் புகழூர் நகர திமுக தலைவர் நொய்யல் சேகர் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.