தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கரூரில் பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Sep 1, 2021, 12:06 PM IST

கரூர்:ஆத்தூர் பழனியப்ப நகரைச் சேர்ந்தவர்கள் மெய்யப்பர், ராஜா. இவர்கள் இருவரும் கோவை சாலையில் பேருந்து கூண்டு கட்டும் பணிக்கு தேவையான பஞ்சு பொருள்கள், உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்துகின்றனர்.

இவர்கள் நேற்றிரவு (ஆக. 31) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கடையில் இருந்து திடீரென புகை மூட்டத்துடன் தீ பற்றி எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட கரூர் - கோவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடையில் பற்றிய தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவத் தொடங்கியது.

தீயை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள்

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், மூன்று வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

இதற்கிடையில், அங்கு வந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர், சுமார் ஐந்து தண்ணீர் லாரிகளை வரவழைத்து, தீயை அணைக்க தீயணைப்புத் துறைக்கு உதவினர். இதையடுத்து, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மின் கசிவு காரணம்

இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த உதிரிபாகங்கள், பஞ்சு பொருள்கள், ஆயில் கிரீஸ் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக இந்த தீ விபத்து, மின் கசிவின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதையும் படிங்க: அட்டை மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details