கரூர்:திருச்சி கருங்குலம் அருகே உள்ள மூக்குரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்கிற குமார்(40). நேற்று (டிச.15) மாலை 5 மணியளவில் அவரது பழைய டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் வெடி பொருட்களை எடுத்துக்கொண்டு கரூர்-திருச்சி எல்லையான கடவூர் பாலவிடுதி குளக்காரன்பட்டி பகுதியை கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து மாவுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாலவிடுதி காவல்துறையினர் உடலை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.