கரூர்:முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினார். இச்சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இது காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்ட சோதனை என்றும், எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் குற்றவாளியாக எம்.ஆர். விஜயபாஸ்கர், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது அண்ணன் சேகர் ஆகியோர் சேர்க்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை
2016 தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில், ரூ. 2,51,91,378 மதிப்பில் சொத்து வைத்திருந்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ரூ. 8 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 648 சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை
2016- 2021 வரை போக்குவரத்து அமைச்சராக அவர் இருந்தபோது வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் 55 விழுக்காடுக்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
அண்ணன் பெயரிலுள்ள சொத்து
கரூர் நகர் பகுதியை சுற்றி உள்ள முக்கியமான இடங்களை அவரது அண்ணன் சேகர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூட்டாக இயக்கிவரும் ரெயின்போ டயர்ஸ், ரெயின்போ ப்ளூ மெட்டல்ஸ் மூலம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது .
ஒவ்வொரு இடமும் அரசு மதிப்பீட்டின்படியே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கும் நிலையில், சந்தை மதிப்பு என்பது பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. உதாரணமாக கரூர் கோவை சாலையில் தற்பொழுது சந்தை மதிப்பு சதுர அடி ரூபாய் 20 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகி வருகிறது. ஆனால் அரசு மதிப்பீடு வெறும் ரூ. 450 மட்டுமே.
அதேபோல முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எல்என்எஸ் கிராமம் திருநகர் பகுதி மானாவாரி நில சந்தை மதிப்பு என்பது 1 ஏக்கர் ரூபாய் 1,56,000ஆயிரம் ரூபாய்க்கு அரசு மதிப்பு கணக்கிட்டுள்ளது.
இதையும் படிங்க:எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு