கரூர்:சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த திமுக மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி கரூரில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள வந்த முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும் முக்கியத் தலைவராகவும் பதவி வகித்த அமைச்சர் சின்னசாமி, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுகவில் தற்போது மீண்டும் இணைந்ததையடுத்து, கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மிகவும் நல்லவர். அவருக்கு நான் சான்றளிக்கிறேன். ஆனால் அதற்கு நேர் எதிரானவர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறக்கப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் கூறுகிறது. செய்த தர்மம் நம்மை காக்கும். அரசியல் பிழை செய்தோருக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும். அந்த தண்டனையை கரூர் வாக்காளர்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் பணியாற்றக்கூடிய ஒருவர் உண்மையைப் பேசுபவராக இருக்கவேண்டும். நல்லவராக இருக்க வேண்டும். எம்.ஆர். விஜயபாஸ்கர் ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற நல்லவர்" என்றார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, கரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.