கரூர்:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தனியார் திருமண மண்டபத்தில் இன்று (பிப் 11) பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் “திமுக, இந்த தேர்தலை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தது, முடியவில்லை. உச்ச நீதிமன்ற ஆணையின் காரணமாக வேறு வழியின்றி தேர்தலை நடத்துகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. அது அவருக்கே தெரியாது.
தமிழ்நாடு காவல் துறை திமுக அரசின் கைப்பாவையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் வாக்களிப்பவரே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். செந்தில் பாலாஜி பணத்தை கொடுத்து ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கி வருகிறார். இந்தப் பிழைப்பு தேவையா?
நேரடியாக அரசியல் ரீதியாக மோதிப் பார்க்க வேண்டும். மிரட்டல் விடுத்து திமுகவிற்குள் ஒவ்வொருவரையும் இழுத்து வருகின்றனர். ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இன்று இல்லாமல் போய்விட்டது. 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரவுள்ளது. குறிப்பாக 27 அமாவாசை தான் உள்ளது. ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறும். 30 ஆண்டுகாலம் பல சோதனைகளை கடந்து அதிமுக ஆட்சியில் இருந்தது.
முதலமைச்சர் பதிவியும், அமைச்சர் பதவியும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்குதான். இவர்கள் கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறார்கள். இப்போது செந்தில்பாலாஜி மீது கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்தான் அமைச்சராக இருப்பார்.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என்று திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது. இப்போது உதயநிதி வந்துள்ளார். அதிமுக தொண்டர்கள் கடைசிவரை உறுதியுடன் இருப்பர். சாதாரண தொண்டன் கூட இங்கு முதல்வராகலாம். திமுக அரசை தூக்கி பிடிப்பது ஊடகம்தான். கரூர் மாவட்டத்திற்கு இந்த அரசு 9 மாதமாக ஒன்றும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு சேகரிக்க உள்ளோம். திமுக எந்த சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்க போகிறது.