கரூரில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் எதிர்த்து கண்டனம் கரூர்: பிச்சம்பட்டி கிராமம் ஆர்.வெள்ளகவுண்டன்பட்டி பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தகிலா கிரானைட் குவாரி தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வெள்ளியணை லட்சுமி திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், 35 வகை ஆவணங்களை மறைத்து 10 வகையான ஆவணங்களை மட்டுமே வைத்து கிரானைட் கல் குவாரிக்கு அனுமதி வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அளித்த சிறப்பு பேட்டியில், "கல்குவாரி உரிமங்கள் வழங்குவதற்கு அரசு சார்பில் கிராம நிர்வாக அதிகாரி முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை வழங்கப்படும் சான்றுகளில் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவுக்கும் வழங்கப்பட்ட ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மடத்துக்குளம் மைவாடி கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததும், முறையான ஆவணங்கள் இணையத்தில் ஏற்றப்படாத காரணத்தினால் டிசம்பர்2022ல் கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, கோவை தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பச்சாபாளையம்,அரசம்பாளையம் மணிகண்டன் மற்றும் பரமசிவம் கல்குவாரிக்கு பொதுமக்கள் பார்வைக்கு அரசு ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்று பதிவேற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கல்குவாரி உரிமம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்கேற்பு கூட்டங்கள் போதிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாமல் நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளியணையில் நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வழங்கிய ஆவணங்களில் தவறான சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் எடுக்கப்பட்ட வரைபடத்தில் 300 கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளது சுட்டிக்காட்டுகிறது ஆனால் கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய சான்றில் உண்மைக்கு புறம்பாக குடியிருப்புகள் இல்லை என்று சான்று வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கிரானைட் குவாரி கொள்ளையும், கல் குவாரி கொள்ளையும் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது உதவி இயக்குநர் கனிமம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள மறுக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை 40 லட்சம் ரூபாய் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளை போவதற்கு கரூர் மாவட்ட உதவி இயக்குநர் கனிமம் அரசு அதிகாரிகள் துணையுடன் செயல்பட்டு வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகின்ற கணேஷ் முருகன் கல்குவாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு சொந்தமான ராம் ப்ளூ மெட்டல் நிறுவனமும் சட்டவிரோதமாக கற்களை அனுமதியின்றி வெட்டி எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Madurai AIIMS Hospital: கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
இது சம்பந்தமான, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆதாரம் வீடியோவாக, பதிவு செய்து அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமூக செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஆதாரங்கள் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறும் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வன்மையாக கண்டிக்கின்றோம். இருவரும் கல்குவாரி உரிமையாளர்களை வழிநடத்துபவர்களாக செயல்பட்டு வருகின்றனர் நேரடியாக இருவர் மீதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். டிஜிட்டல் முறையில் கல் குவாரிகளில் ஆய்வு நடத்த வேண்டும். விதிமுறை மீறல்கள் மீது அபராதம் விதித்தால் பல லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் ஆனால் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சில லட்சம் மட்டும் அபராதம் விதித்து கண் துடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழக முதலமைச்சர் நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த தேர்தலின் போது சமூக செயல்பாட்டாளர்கள் மீது அதிமுக அரசின் அடக்கு முறையை கூறிதான் கரூரில் வாக்கு சேகரித்தனர். நேர்மையாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் தேர்தல் தமிழக முதலமைச்சருக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். சட்டவிரோத கிரானைட் குவாரி கல் குவாரிகளை அரசு நேர்மையுடன் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சமூக செயல்பாட்டாளர்களை மிரட்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு ரவுடி போல செயல்பட்டு வருகிறார். குண்டாஸில் கைது செய்வேன் என்று பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு மாவட்ட ஆட்சியர் இப்படித்தான் பேசுவாரா? கல் குவாரி உரிமையாளர்களை கனிவான முகத்துடன் வரவேற்பதும், சமூக செயல்பாட்டாளர்களை பார்த்தால் கசப்பான முக பாவனை கரூர் மாவட்ட ஆட்சியர் வெளிப்படுத்துகிறார். தமிழக அரசு கரூர் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோயில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!