கரூர்:மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
குறிப்பாக கரூரில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் சுப்பிரமணி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையை நடத்தினர்.
அதுமட்டுமின்றி, அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் புதிதாக துவங்கி உள்ள தொழில் பற்றிய விபரங்கள் போன்ற அனைத்தும் விசாரணைக்கு உள்ளானது.
மேலும், கணக்கில் காட்டாமல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே திமுக ஆதரவாளர்கள் சோதனை செய்ய சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொள்ளவிடாமல் தடுத்து, அவர்கள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இச்செயலுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.