கரூர்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் தான்தோன்றிமலை அசோக் நகரில் கரூர் மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில் நேற்று (ஜூலை 25) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மண்டல செயலாளர் ரங்கன், கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ்கண்ணன், பொருளாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, ஈடிவி பாரத்துக்கு பிரத்யோகமாக அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு மின்வாரியத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் மின் வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தும், முந்தைய அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பேரிடர் காலங்களில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி இருக்கிறோம். தற்போதும் தடையில்லா மின்சாரம் தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க உழைத்து வருகிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சி முடியும் தருவாயில் கேங்மேன் பணியிடம் என்ற ஒரு புதிய பணியிடத்தை உருவாக்கி சுமார் பத்தாயிரம் பேரை அவசரஅவசரமாக பணியில் அமர்த்தி ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சித்து விட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என சங்கம் சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது அமைந்துள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணி நிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரை, மின்சாரத்துறை அமைச்சர் மூலமாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி