கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரமாகச் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்றுவரும் செய்தி அதிமுக கட்சித் தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பரவியதால் ஏராளமான அதிமுகவினர் கட்சி அலுவலகம் முன்பு கூடினர்.
இதனைத் தொடர்ந்து சோதனை நிறைவில் அலுவலர்கள் எவ்விதப் பணமோ, பொருளோ கைப்பற்றாமல் தேர்தல் பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர். இதையடுத்து முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சி பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அதிமுக கட்சி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக மிக அமைதியாக நடத்தியது. தற்போது திமுக ஆட்சியில் கோவையிலும் கரூரில் மட்டும் இதுபோன்ற அராஜகங்கள் அரங்கேறிவருகின்றன.
அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் குறிப்பாக காவல் துறையினர் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிந்து திமுகவுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர்.
தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்குச் செல்லும் அதிமுக முகவர்களை திமுகவினர் மிரட்டிவருகின்றனர். திமுகவினருக்குத் தோல்வி பயம் இருப்பதால் பணப்பட்டுவாடா மேற்கொண்டுவருகின்றனர்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக கட்சியின் மாவட்டச் செயலாளர்போல செயல்பட்டுவருகிறார்.
இன்று அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் எவ்வித பணமோ, பொருளோ கைப்பற்றவில்லை எனக் கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை கரூர், கோவையில் மட்டும்தான் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்க்கிறது. தேர்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி கரூர் மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தோல்வி பயம்; ரவுடிகள், சமூகவிரோதிகளை இறக்குமதிசெய்த திமுக!'