தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நன்னடத்தை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா, அன்பளிப்பு கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் அரவக்குறிச்சி, கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆறு நிலையான கண்காணிப்புக் குழுக்களும், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தலா மூன்று கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணி, சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 5ஆம் தேதி இரவு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சணப்பிரட்டி பகுதியில் கேசவன் என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக அதிமுக சின்னம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சர் படம் அச்சிடப்பட்ட நோட்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிமேகலை தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், 3030 நோட்டுப்புத்தகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல்செய்து கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்ட நிர்வாகமோ மார்ச் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு பறிமுதல்செய்த விவரங்களை மறுநாள் காலை 10 மணி வரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தகவலறிந்து செய்தியாளர் கேட்ட பிறகே மாவட்ட நிர்வாகம் மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான பிரச்சினை என்பதால் தகவலை வெளியிட தயக்கம் காட்டியுள்ளனர். மேலும், இதுவரை இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்திவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படை பெண் அலுவலர் மணிமேகலைக்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு குறிப்பிட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளும்போது தேர்தல் ஆணை விதிமுறைப்படி வருமானவரித் துறை அலுவலர்கள், கணக்கீட்டாளர் தகவல் அளித்து அவர்களை வைத்துதான் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தன்னிச்சையாகச் சோதனை மேற்கொண்டு பறிமுதல்செய்த அலுவலர் மணிமேகலை மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் காரணம் கேட்கும் குறிப்பாணை அனுப்பியுள்ளார்.
இதனால், கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையில் பணிபுரியும் அலுவலர்கள் மத்தியில் அச்சமும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 7ஆம் தேதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிமேகலை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கக் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அது தற்பொழுது வெளியாகி உள்ளது .
அக்கடிதத்தில் மணிமேகலை தெரிவித்துள்ளது யாதெனில், கரூர் சட்டப்பேரவைத் தனித்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வழங்கியுள்ள விளக்கும் கேட்கும் குறிப்பாணையில் தேர்தல் பறக்கும் படை சோதனையின்போது கரூர் நகராட்சி வார்டு 13 ஆதிதிராவிடர் காலனி தொழில்பேட்டை பகுதியில் 66 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3030 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல்செய்யப்பட்டு கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவகாரத்தில் தேர்தல் விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகத் தெரிவித்து விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கம் பின்வருமாறு: மார்ச் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரை தேர்தல் பறக்கும் படை-3 கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரராக்கியம் பிரிவு சாலையில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வாகன தணிக்கையின்போது மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மூலம் லாவண்யா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில்பேட்டை ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ராஜகோபால் வீட்டில் சோதனையிட்டபோது, முதலமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டுப்புத்தகங்கள் கண்டறியப்பட்டன.