கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேடப்பட்டி நெய்தலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காத்தான் (45), சுப்பிரமணி (40), கந்தசாமி (35) என மூன்று மகன்கள் உள்ளனர். இவருக்குச் சொந்தமான 3 1/2 ஏக்கர் வேளாண் நிலத்தை கடைசி மகன் கந்தசாமி உழுது விவசாயம் செய்துவந்ததாகத் தெரிகிறது.
இந்நிலத்தை கந்தசாமியின் உடன்பிறந்த அண்ணன்கள் காத்தான், சுப்பிரமணி ஆகியோர் தங்களுக்குப் பிரித்து தரும்படி கூறிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த நிலத்தில் யாரும் சாகுபடி செய்யாத நிலையில் கந்தசாமி மட்டும் நிலத்தில் நெல் பயிரிட்டு கடந்த மூன்று மாதங்களாக சாகுபடி செய்துவந்துள்ளார்.
இதனிடையே நேற்று (பிப். 14) அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. அப்போது அங்குவந்த காத்தான், சுப்பிரமணி ஆகிய இருவரும் கந்தசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.