கரூர்:கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை அருகே மன்மங்கலம் தாலுகா வாங்கல் அருகே உள்ள மல்லம்பாளையம் மற்றும் என்.புதூர் ஆகிய இரண்டு பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இந்த அரசு மணல் குவாரிகளில், விதிமுறை மீறல்கள் நடைபெறுவதாக சில புகார்கள் எழுந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் வீடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரி ஆகிய பகுதிகளில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சோதனை செய்து, பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், நேற்று (அக்.10) மீண்டும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்படும் என்.புதூர், மல்லம்பாளையம் ஆகிய 2 இடங்களில் காலை 10 மணி முதல் ஐந்து கார், ஒரு டெம்போ ட்ராவலர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துணை ராணுவப்படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர்.
காவிரி ஆற்றில் அரசு அனுமதித்த விதிமுறையை மீறி, அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்பட்டுள்ளதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஐஐடி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு உதவியுடன் அளவிடும் பணியும் நடைபெற்றது. மேலும், அளவீடு செய்யும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் டிஜிட்டல் சர்வே செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு சோதனையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மாலை 4 மணிக்கு சோதனையை நிறைவு செய்தனர். அமலாக்கத் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக அழைப்பானை அழைக்கப்பட்டும் என்றும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஈடிவி செய்தியாளரிடம் கூறியதாவது, "சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீர்நிலைகள் சம்பந்தமான பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதியரசர்கள் புகழேந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நான் தொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, மணல் குவாரிகளை கண்காணிக்கப் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13ஆம் தேதி இறுதி வாதம் நடைபெற்றதை அடுத்து, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
அரசு மணல் குவாரிகளில் அரசு அதிகாரிகள் துணையுடன் பல கனரக வாகனங்கள் அரசு விதிமுறைகளை மீறி இயக்கி மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, காவிரி ஆற்றைக் காக்க அரசு மணல் குவாரி மூடப்பட வேண்டும் என்பதே அரசிடம் நான் வைக்கும் கோரிக்கையாகும். மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிறந்து 72 நாட்களில் 33 ஆவணங்கள்.. மத்திய பிரதேச குழந்தையின் உலக சாதனை!