கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், " வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறித்து பெறப்பட்ட புகார் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மூன்று பேர் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
ஆனால், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சியில்தான் இது சம்பந்தமாக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது என்றும், தற்பொழுது அந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது என தவறான தகவலை அளித்துள்ளார்.
நடவடிக்கை நிச்சயம்
இதற்கு மறுப்பு தெரிவித்து குழு அமைக்கப்பட்ட விவரம், அறிக்கை ஆகியவற்றை ஊடகங்களுக்கு எங்கள் சார்பில் வழங்கிய பின்னரும் ஏன் இரண்டு நாட்களாக முன்னாள் அமைச்சர் அமைதி காத்து வருகிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது என்றால் எப்பொழுது அமைக்கப்பட்டது, அந்த ஆய்வுக்குழுவின் அதிகாரிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தவறுகளைக் கண்டறிந்து, அது எந்தத் துறையாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மின் கட்டணம் வசூல் குறைவு
தொடர்ந்து பேசிய அவர், "தங்கர்பச்சான் பதிவிட்டுள்ள பதிவில் கட்டணக் கொள்ளை நடைபெற்றுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஜூலை 2020ஆம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்விநியோகம் இருந்த பொழுது மின்சார வாரியம் 780 கோடி கட்டணம் வசூல் மேற்கொண்டிருந்தது.