தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர்; தடுக்க விவசாயிகள் கோரிக்கை! - ஆறு

கரூர்: நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cauvery

By

Published : Jun 7, 2019, 5:49 PM IST

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், ஆண்டிபாளையம் கோயில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும் போது தேக்கிவைத்திருந்த சாயப்பட்டறை கழிவுநீரை மழை நீருடன் கலந்து விடுவது வழக்கம்.

கடந்த சில தினங்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் மழை நீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் வருவதால் கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் காணப்படுகிறது.

இந்த கரும்பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீர் காவேரி நீருடன் கலந்து விடுவதால் சாதாரண நிறத்திற்கு மாறிவிடுகிறது. இது சாயப்பட்டறை அதிபர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், திருப்பூர் சாய கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

இது குறித்து விவசாய சங்க தலைவர் ராஜமாணிக்கம், "நொய்யல் ஆற்று தண்ணீரானது குடிநீர் தேவைக்கு மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக திருச்சி முதல் சென்னை மாநகர் வரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இந்த தண்ணீர் பயன்படுத்தபடுகிறது. இதில் கலக்கப்படும் சாயப்பட்டறை கழிவு இருக்கக்கூடிய பாதரச கழிவுகள் நீரில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை மக்கள் குடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆகவே இந்த தண்ணீரை உடனடியாக மக்கள் குடிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால் இந்த அமிலமானது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை கொன்று புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவற்றை உருவாக்க கூடியதாகும்" என்றார்

ABOUT THE AUTHOR

...view details