கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில் ரமேஷ் என்கின்ற நாயை, சின்னதம்பி என்பவர் வளர்த்துவந்தார். இந்நிலையில் அந்த தெருவில் உள்ள அனைவரது வீட்டிலும் நன்கு பழகிய ரமேஷ் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடாமல் தெரு மக்களைப் பாதுகாத்துவந்தது.
இந்நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் நாயின் தொல்லை அதிகளவில் இருப்பதாகக் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்த நிலையில், இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றனர்.
ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயைக் கொல்ல தூண்டியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி நாயின் சடலத்தோடு அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாய்க்கு நீதி வேண்டி திரண்ட ஊர் மக்கள் மேலும், இச்சம்பவத்தினால் அந்த பகுதி வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகள் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. பின்பு காவல் துறையினரும், அதிமுக நிர்வாகிகளும் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நாயின் சடலம் சாலையிலிருந்து எடுக்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மனிதனைத் தாக்கிவிட்டுச் சென்றாலே கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலைமறியல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.