கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுகவினர் சாலையை மறித்து அதிகாரிகளை வெளியேற விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கரூர்: நேற்று (மே 26) காலை தொடங்கிய வருமான வரித் துறை சோதனை திடீரென நிறுத்தப்பட்டு, மாலை 5 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும், இரவு 11 மணி நிலவரப்படி க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு கல் குவாரிகள், சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள 2 தொழில் நிறுவனங்கள், கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் மற்றும் காந்தி கிராமம் பிரேம்குமார் என்பவரது வீடு ஆகிய ஆறு இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு, இரவு 7 மணியளவில் 5க்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 25 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர். அப்போது, அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், சுமார் 3 மணி நேரமாக அதிகாரிகள் காத்திருந்தனர்.
அப்போது, இரவு சுமார் 11 மணியளவில் வீடு திரும்பிய தாரணி சரவணனின் மனைவி வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டுக்குள் மின்விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் கதவில் நோட்டிஸ் ஒட்டி சீல் வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், அவரது மனைவி நோட்டீசை பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் நிலையில், அதிகாரிகள் நோட்டீஸ் கதவில் ஒட்டி கதவிற்கு சீல் வைத்ததாக குற்றம் சாட்டிய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுகவினர் வருமான வரித்துறை அதிகரிகளை சிறை பிடித்தனர்.
மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் கார்களில் வெளியேற முடியாமல் நான்கு பக்கங்களிலும் இரட்டை மாடுகளை வண்டியுடன் நிறுத்தி சாலைகளை மறித்தனர். பின்னர் இது குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட காவல் துறையினர், அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, நோட்டீஸை அகற்றுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், துணை மேயர் தாரணி சரவணன் வீட்டின் நுழைவு கதவில் ஒட்டப்பட்ட சீல் மற்றும் நோட்டீஸ்களை அகற்றி, அவரது மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, இரவு 12.30 மணியளவில் அங்கிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியேறினர். இந்த நிலையில், துணை மேயர் தாரணி சரவணன் வீடு அமைந்துள்ள ராயனூர் தீரன் நகரில் 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி நிறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.
முன்னதாக, நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்றபோது, வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் நடத்திய போராட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல் நாளின் முழு விவரம்!