கரூர்: கரூர் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (60). போக்குவரத்துத்துறை பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில், தீக்குளித்து உயிரை காணிக்கையாக செலுத்துவதாக பிரார்த்தனை செய்துள்ளார்.
அவரின் வேண்டுதல் போலவே திமுகவும் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நல்ல நாள் பார்த்து உலகநாதன் காத்திருந்தார்.
இந்நிலையில் ஆனி அம்மாவாசையான இன்று (ஜூலை 9) கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு உலகநாதன் வெளியே சென்றுள்ளார்.
பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிரிழப்பு
பின்னர் காலை 11 மணி அளவில் மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவிலுக்குள், பெட்ரோல் கேனுடன் நுழைந்துள்ளார். கோவிலை வலம் வந்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கு பணியிலிருந்த கோவில் ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டும் பயனில்லாமல், உடல் முழுவதும் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாங்கல் காவல்துறையினர், உலகநாதன் கைப்பட எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டுதல்
அவர் எழுதிய கடிதத்தில், ”சட்டபேரவைத் தேர்தல் அறிவித்த உடனேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என எண்ணியிருந்தேன். கரூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் வி. செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன்.
துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீரைப் பார்த்து மகிழ்ச்சி
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து பேசியது, மின்வெட்டு குறித்த விளம்பரம் ஆகியவற்றை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பியும் திமுகவே வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறுதிப் பெரும்பான்மையோடு, பதவி ஏற்றதை பார்த்த அண்ணியார் துர்கா ஸ்டாலின், ஆனந்தக் கண்ணீர் வடித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.