கரூர் நகர் பகுதியில் உள்ள மாவடியான் கோயில் தெருவில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு வைக்கப்பட்ட திமுக விளம்பரப் பலகையை மறைத்து, அதிமுகவினர் விளம்பரப் பலகை ஒன்று வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து முன்னதாக திமுக பிரமுகர் பிரபாகரனுக்கும், அதிமுக பிரமுகருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது.
தொடர்ந்து, இது தொடர்பான புகார் கரூர் நகரக் காவல் நிலையத்தில் ஏற்கப்படாத நிலையில், மன உளைச்சலுடன் பிரபாகரன் வீடு திரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பிரபாகரனின் உடல், கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவருடைய உடலை வாங்க மறுத்து நேற்று (நவ.01) திமுகவினர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நான்கு மணி நேரம் நீடித்த இப்போராட்டம் குறித்து தகவலறிந்த கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.