கரூர்:தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எட்டு ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் அக்டோபர் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் நேற்று (செப்.30) மேலப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு மேற்கொள்வதற்காக கறுப்புக்கொடி ஏந்தி, காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பேச்சு வார்த்தை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, திமுக கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் இறுதியில் உடனடியாக பணிகள் தொடங்குவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கைகளான குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி, ஆறு மாதத்துக்குள் அமைத்து கொடுக்கப்படும் எனவும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி உறுதியளித்தார்.
இதனால் போராட்டத்தை விலக்கிக் கொண்ட பொதுமக்கள், அப்பகுதி முழுவதும் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடிகளை அவர்களே அகற்றினர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.