தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும்; அதுவே தங்களது விருப்பமாக உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 19, 2021, 8:12 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்:கோடங்கிபட்டி பகுதியில் மேற்கு நகர திமுக சார்பில், திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று(டிச.19) மாலை நடைபெற்றது.

இந்த முகாமில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களின் அன்பைப் பெற்றவர் உதயநிதி

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பகுதிவாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

நடந்து முடிந்த தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் பயணித்து மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றவர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது.

திமுகவிற்கு 100 விழுக்காடு வெற்றி

மேடைப்பேச்சுக்காக எது வேண்டுமானாலும் பேசுவார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரம் போய்விட்டது என்ற விரக்தியில் பேசுகிறார்கள்.

திமுக சார்பில் தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். தேர்தல் தோல்வி, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துகளைப் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுகவிற்கு 100 விழுக்காடு வெற்றியை மக்கள் தருவார்கள்.

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட அரசு அலுவலர்களை ஒருமையில் பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details