மழைநீர் வடிகால் பள்ளத்தில் இறங்கி போராடிய கணவன் மனைவி மீது கான்கிரீட்டை போட்டு மூடிய மாநகராட்சி ஒப்பந்ததாரர் கரூர்:கரூர் மாநகராட்சி வடக்கு காந்திகிராமம் ஜெ.ஜெ. நகர் 16ஆவது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கரூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தினகரன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
இவர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சாலை ஓரமாக உள்ள வீட்டின் சுவர்களையும் சேர்த்து பள்ளமாக பறித்து, மழைநீர் வடிகால் அமைக்கும்பொழுது, பள்ளமான சுவர் பகுதியை, நிரப்புவதற்கு கான்கிரீட் அமைக்க ரூபாய் ஒரு லட்சம் வரை, அப்பகுதியில் பேரம் பேசி வருகிறார்.
இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரிடம் ஒப்பந்ததாரரும் அவருக்கு துணையாக கரூர் மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினர் பூபதியும் பணம் கேட்டு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் தினகரன், ஏப்ரல் 14ஆம் தேதி காலை 9 மணியளவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டிய சுவற்றை கான்கிரீட் அமைக்காமல், 'கான்கிரீட் தளம் அமைக்க முடியாது; எந்த ஊடகத்தில் செய்தி வெளியானாலும் நான் அதைப் பற்றி கவலைப்படப்போவதில்லை.
இனி, என்னால் உனது வீடு அருகே மழை நீர் வடிகால் அமைத்துத் தர முடியாது' என்று கூறிய ஒப்பந்ததாரர் தினகரன் பேச்சைக் கேட்டு பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ஒப்பந்ததாரர் தினகரன் பேசிக்கொண்டு இருந்த சில நிமிடத்தில், அங்கு கான்கிரீட் அமைக்கும் வாகனம் மூலம் அருகில் வடிகால் அமைப்பதற்கான கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது. கோமதி தனது கணவருடன் சேர்ந்து பள்ளத்தில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், ஒப்பந்ததாரர் இவரிகளின் போராட்டத்தை எதையும் கண்டுகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்ட கோமதி மற்றும் அவருடைய கணவர் மீது தளம் அமைப்பதற்கு, வைத்திருந்த கான்கிரீட்டை, அப்படியே அவர்கள் மீது நிரப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த கோமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஒப்பந்ததாரர் தினகரன் சம்பவ இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதனிடையே, சம்பவம் நடைபெற்றது தொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பேசும் கோமதி, தனது வீட்டை ஒட்டி, மாநகராட்சி ஒப்பந்ததாரர் மூலம் மழைநீர் வடிகால் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும்; அதில் அவர் அளவிற்கு மீறி வீட்டின் சுவற்றை ஒட்டிய மண் தளத்தை எடுத்ததால், வீடு வலுவிழந்து வீட்டுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.
மேலும், இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாநகராட்சி உதவி பொறியாளர் இரும்பு முட்டுகள் வழங்கியுள்ளனர் என்றும்; இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக பணம் கொடுக்காவிட்டால், இரும்பு முட்டுகளை அகற்றி விடுவோம் என மிரட்டி வந்தனர் எனவும்;
தற்பொழுது கவுன்சிலர் பேசும் வீடியோ ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருப்பதால் ஆத்திரத்தில் ஒப்பந்ததாரர் தனது வீட்டு அருகே மழை நீர் வடிகால் கட்டும் கான்கிரீட் தளத்தை அமைக்காமல் மிரட்டும் தொனியில் பேசினார் எனவும் குறிப்பிடுகிறார். இதனால் போராட்டத்தில் இறங்கிய தனது கணவர் மீதும் தன் மீதும் கான்கிரீட் நிரப்பி அராஜகத்தில் ஈடுபட்டனர் எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
இதற்கு தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது என்று, தன் ஆதங்கத்தை தெரிவித்தார். இது மட்டுமின்றி ஆளுங்கட்சி கவுன்சிலர் என்பதனால், கரூர் அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, கரூர் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:சற்று முன் வயிற்றில் உதைத்த இளைஞருடன் கொஞ்சி பேசிய கர்ப்பிணி.. ஷாக்கிங் வீடியோ!