கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வேட்டமங்கலம் ஊராட்சி சேமங்கி, மரவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நொய்யல் சேகர், மதிமுக மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தனர்.
அப்போது, திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில்," எனது தந்தை மொஞ்சனூர் ராமசாமி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நானும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினராக பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.
அடிப்படையில் நான் பொறியியல் படித்த பட்டதாரி என்றாலும், எனது முழு நேர வேலை விவசாயமும் அரசியலும் தான். உங்களின் அடிப்படை பிரச்சினைகள் என்ன என்பதை நான் முழுமையாக அறிவேன்.