கரூர்:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்.22ஆம்தேதி எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதில் திமுகவைச் சேர்ந்த 3ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரி இன்று (மார்ச்.8) மதியம் 12 மணியளவில் தனது ராஜினாமா கடிதத்தை புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினார்.