கரூர் அருங்காட்சியகம், சேரர் அகழ்வைப்பகம் ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் நடுகல், சுடுமண்ணில் செய்யப்பட்ட பண்டையகால பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை, அருங்காட்சியகத்துறை சார்பில் இரண்டு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது பழைய திண்டுக்கல் சாலையில் 2010ஆம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் இடம்மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.
அரசு அருங்காட்சியகம்:
அருங்காட்சியத்தில் இசைக்கருவிகள், ஓவியங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் அனைவரும் காண வேண்டிய இடமாக இருக்கிறது.
அகழ்வைப்பகம், அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அரசு அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்படும்" என்றார்.