கரூர்அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கரூர் மண்டலத்தின் உதவியாளராகவும் பணியாற்றிய சிவக்குமார் என்பவரால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
சித்தலவாய் கிராம ஊராட்சி 6-வது வார்டு பெண்களுக்காக கடந்த 2019 தேர்தலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், வேட்புமனுக்கள் பெறப்பட்டபோது இரண்டு ஆண்கள் வேட்புமனு தாக்கல் செய்து பின்னர், இறுதிப்பட்டியலில் பங்கேற்று தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி என்கின்ற ஆண் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர், சித்தலவாய் ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வெற்றி பெற்றது குறித்து கடந்த 06.07.2022 அன்று கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தது.