ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி அதற்கான தனி ஊழியர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நியமித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் மாற்றுத்திறனாளிகள் பலர் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பல்வேறு கோரிக்கைகளை அளிப்பதற்கும் வருகை புரிகின்றனர்.
ஆனால் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பேருந்து நிலையம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்வதற்கு சக்கர நாற்காலி வசதி இல்லாமல் அவதியுற்று வந்ததாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன் எதிரொலியாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சக்கர நாற்காலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததுடன் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவரை நியமித்து மாற்றுத்திறனாளிகளுடன் உதவியாளர் வராத பட்சத்தில் அவர்களுக்கு உதவிட உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகள் 10 குழந்தைகளுக்கு காது கேட்கும் உபகரணங்கள் மற்றும் நகரும் நாற்காலி என 11 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
இந்த மனித நேயமிக்க செயல்பாட்டை வரவேற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.