தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் அருகே விநோத மரபு: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! - கரூர் அடுத்து கிருஷ்ணராயபுரம்

கரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விநோதப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

Etv Bharatகரூர் அருகே ரூசிகரம்:தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்கள் செலுத்திய பக்தர்கள்..!
Etv Bharatகரூர் அருகே ரூசிகரம்:தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்கள் செலுத்திய பக்தர்கள்..!

By

Published : Aug 4, 2022, 10:24 PM IST

கரூர்அடுத்து கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன், மும்முடையார் குல மக்களின் தெய்வமாகவும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகமக்களின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரசித்திபெற்ற மகாலட்சுமி அம்மன் ஆலயம் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்து திருக்கோயில் ஆகும்.

இக்கோயிலில் ஆடி மாதத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது. அம்மன் கோயிலில் தங்கள் வேண்டுதலை வைத்து வழிபாடு நடத்திச்சென்றவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தன. தற்போது கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கரூர் அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி ஸ்ரீ கருட அம்மன், ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி, ஸ்ரீபைரவ மூர்த்தி, ஸ்ரீராமர், ஸ்ரீநந்தீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆடிப்பெருக்கு தினத்தன்று மாயனூர் செல்லாண்டியம்மன் ஆலயத்தில் சிறப்புப்பூஜைகள் நடத்தப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 9 மணி அளவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆடி மாதம் 1ஆம் தேதி முதல் மீனாட்சி அம்மனுக்கு விரதம் இருந்து 18 நாட்கள் கழித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தலையில் பூஜிக்கப்பட்ட தேங்காயை கோயில் பூசாரி உடைத்தார். அப்பொழுது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பியதுடன் தலையில் உடைத்த தேங்காயை நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் எடுத்துச்சென்றனர்.

தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தலையில் தேங்காய் உடைத்துக் கொண்ட கோவையைச் சேர்ந்த மாயாதேவி என்ற பெண் கூறுகையில்: 'கடந்த 25 ஆண்டுகளாக இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறேன். மூன்றாவது முறையாக தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தவந்துள்ளேன். இதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழா தடைபட்டு இருந்தது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு 18 நாட்கள் விரதம் இருந்து இன்று கோயில் வளாகத்தில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினேன்’ என்று கூறினார்.

கரூர் அருகே விநோத மரபு: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

புத்தூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைசாமி என்பவர் கூறுகையில்: 'மனநிறையுடன் மகாலட்சுமி அம்மனை வேண்டினால் கேட்ட வரத்தை தந்து வேண்டுதலை நிறைவேற்றுவதாக எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டேன்’ என்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மேற்கொண்டனர். குளித்தலை சரக காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:'கீழ்த்தரமான செயல்' - ஓபிஎஸ்ஸை கண்டித்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details