கரூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புத் தீவிர நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே டெங்கு நோய் ஏற்படுவதற்கு காரணமான மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே உள்ள நெகிழிப் பொருள்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றவும் தூய்மைப் பணியில் ஈடுபடவும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.
அரசு மதுபான கடைக்கு அபராதம் இதன் அடிப்படையில் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்குள்பட்ட கொசூர் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடை எண் '5037' அருகில் செயல்பட்டுவந்த மதுபான கடையில் நெகிழி டம்ளர்கள், நெகிழிப் பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்விற்குச் சென்ற அலுவலர்கள் அதனை தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தியும் சுத்தப்படுத்தாததால் இன்று மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட மதுபான கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நெகிழிப் பொருள்கள் சிதறியிருந்ததும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான சூழல் இருந்ததையும் கண்டு மதுபான பார் நடத்தும் உரிமையாளருக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அங்கு இருக்கிற குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதனையேற்று கடை உரிமையாளர் உடனடியாக அபராதத் தொகையை செலுத்திவிட்டு தனது மதுபானக் கடையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க: பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: மூதாட்டியை கொலை செய்த 2 பேர் கைது