100 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியணை கிராமத்தில் வசித்த கோபால் என்பவர், பச்சை அரிசி, அச்சு வெல்லம் கொண்டு வீட்டிலேயே தயாரித்து அதிரச விற்பனையில் ஈடுபட்டுள்ளார். மிகவும் சுவை மிகுந்த அந்த அதிரசம், சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனால் பலரும் அங்கு வந்து அதிரசம் வாங்கிச் சென்றனர். பின்னர், 1960 ஆம் ஆண்டு வெள்ளியணை கடை வீதியில், தனது மகன் ராமு பெயரில் அதிரசக்கடை திறந்தார் கோபால். அதுவே தற்போது 4 ஆவது தலைமுறையாகவும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.
நாளடைவில் அண்டை மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கிய அதிரசத்தின் தனிச்சுவைக்கு, இப்பகுதியின் தண்ணீர் மற்றும் கை பக்குவமே, முக்கிய காரணம் என்கின்றனர் கோபால் குடும்பத்தினர். பச்சரிசியை ஊர வைத்து அரைத்து, விறகடுப்பில் அச்சு வெல்லத்தை பாகாக்கி அதில் ஏலக்காய், சீரகம் கலந்து, செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் இந்த அதிரசங்கள் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.