கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை காவல் எல்லைக்குட்பட்ட அப்பிபாளையம் பகுதியில் கடந்த குடியரசு தினத்தன்று தான்தோன்றிமலை அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த பைனான்சியர் சரவணன் தனது அடியாட்களுடன் அப்பிபாளையம் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கந்து வட்டி கும்பல் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா மாநில துணைத்தலைவர் தலித் ராஜகோபால், சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் புகழேந்தி கண்மணி ராமச்சந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் கராத்தே இளங்கோ, மாவட்ட ஊடக மையம் அமைப்பாளர் புலி ஈழம் உதயா, புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி உள்ளிட்டோர் கூட்டாக கையப்பமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, "கரூர் அருகே உள்ள அப்பிபாளையம் பகுதியில் வசித்து வரும் பட்டியிலனத்தவர் கமலநாதன் மனைவி அய்யம்மாள் மேற்கூறிய சரவணன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 கடன் தொகைக்கு 15 தினங்களுக்கு ஒரு முறை வட்டி மட்டும் ரூ.1,000 செலுத்தும் வகையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வட்டியாக மட்டும் ரூ.48,000 செலுத்தி வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசல் தொகை ரூ.6,000 தொகையை வழங்கியுள்ள நிலையில், வட்டித் தொகையை கேட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.