கரூர்:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டிகத்தின் உறுப்பினருமான சாமானிய மக்கள் நலக் கட்சி கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கால் குற்ற சரித்திர பதிவேட்டில் தனது பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், தற்போது அது தனக்கு வழக்கறிஞராக தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவதற்கு தடையாக உள்ளதாகவும், எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 23 டிசம்பர் 2022 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குற்றச்சரித்திர பதிவேட்டில் சண்முகத்தின் பெயரை நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை கரூர் மாவட்ட காவல் துறை கடைபிடிக்காமல் தொடர்ந்து தன் மீது பொய் வழக்குகள் பதிந்து வருவதாக கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பினார்.
அதன் பின்னரும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சண்முகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் ஆஜராகிய நிலையில், சண்முகத்திற்கு ஆதரவாக கடந்த ஜூன் 2, 9, 12 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொடர்ந்து 4 முறையும் ஆஜராகாத காரணத்தினால் நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வருகிற ஜூலை 5 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.