தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி சான்றிதழ் விவகாரம்: மனுவை திரும்பப் பெற நீதிமன்றம் மறுப்பு

கரூர்: போலியாக சான்று பெற்று மருத்துவம் பார்த்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற கோரிய வழக்கில், மருத்துவர் பெற்றுள்ள சான்றுகள் போலி என தெரிய வந்ததால் மனுவை திரும்பப் பெற அனுமதி மறுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Court
Court

By

Published : Oct 16, 2020, 9:37 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் இந்தப் பகுதியில் ஜெயம் மருத்துவமனை என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் செய்து வந்துள்ளார். போலியாக மருத்துவச் சான்றிதழ் பெற்று மருத்துவம் செய்து வருவதாக சுகாதாரத்துறை இயக்குநருக்கு சென்ற புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இவரை கைது செய்தனர். மேலும், இவரது மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆங்கில மருத்துவம் படித்து சான்று பெற்றுள்ளேன், தன் மீது காவல்துறையினர் தவறுதலாக வழக்குப் பதிவு செய்து உள்ளனர். எனவே எனது மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சான்றுகளை சரி பார்த்த நீதிபதி, இவர் பெற்றுள்ள சான்றுகள் போலி என தெரியவந்ததால் மனுவை திரும்பப் பெற அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.

மேலும், மருத்துவம் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் செய்பவர்கள் போலியாக சான்றிதழ் பெற்று தொழில் செய்வது சமூகத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல், எனவே மனுதாரரின் மனுவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு நவம்பர் 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details