கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று (மார்ச் 2) மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கரூர் மாநகராட்சியில் திமுக - 42, அதிமுக - 2, காங்கிரஸ் - 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1, சுயேச்சை - 2 என 48 வார்டுகளில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரூர் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கரூர் மாநகராட்சி 22 ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமா மகிழ்ச்சியில் அழுதுகொண்டே பதவியேற்றுக் கொண்டார். மேலும் 45 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலில் விழுந்து பதவியேற்றுக் கொண்டார். 48 ஆவது வார்டு கவுன்சிலர் வேலுச்சாமி மட்டும் கடவுள் மீது ஆணையிட்டு உறுதி ஏற்கிறேன் எனப் பதவியேற்றுக் கொண்டார். முதல்முறையாக நகராட்சியாக இருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட கரூரில் பெண் மேயர் நாளை மறுநாள் (மார்ச் 4) தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதையும் படிங்க:கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைக்கூறி பொறுப்பேற்பு