கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர் வழங்க மறுப்பது கண்டித்தும், பணி நேரத்தின்போது தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் மரியாதை குறைவாக நடத்துவதை கண்டித்தும் (இன்று ஜூலை 12ஆம் தேதி) காலை முதல் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் அமைந்துள்ள தான்தோன்றிமலை மண்டல அலுவலகம் முன்பு இன்று காலை 6 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட கரூர் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, தான்தோன்றிமலையில் இருந்து சுங்க கேட், திருமாநிலையூர் லைட்ஹவுஸ் வழியாக ஊர்வலமாகப் பணியினை புறக்கணித்து, தூய்மைப் பணியாளர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர்.
அப்போது கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகப்பேட்டி அளித்த ராசு கூறுகையில், "கரூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்கள் மரியாதை குறைவாக ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்களால் தினம்தோறும் நடத்தப்படுகின்றனர். விடுமுறைக்கு ஊதிய பிடித்தம் மேற்கொள்வது, பணியின்போது மரியாதை குறைவாகப் பேசுவது எனப் பல்வேறு வகையில் தூய்மைப் பணியாளர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று மாதம் 12 நாட்கள் ஆயினும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் ஒப்பந்ததாரர் முறையாக ஊதிய நாளில் ஊதியம் வழங்குவது இல்லை. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப்படுவதில்லை. அதற்கான உரிய ஆவணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.