கரூர் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இதனிடையே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுரையின் பேரில், நேற்று (ஜூன் 6) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தலைமையில் மண்டல அலுவலர்களுடனான கரோனா ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல வாரியாக இதுவரை எத்தனை மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவுள்ளன, எத்தனை பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பகுதியில் கண்டறியப்பட்டுள்ளனர், தொடர்ந்து தொற்று உள்ள பகுதியை எப்படி கண்காணிப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர், மண்டல அலுவலர்களுக்கு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் உருக்கமாக பேசினார்.
இதையும் படிங்க: மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம்