கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராமங்களுக்குத் தேவையான கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள், மருந்துகள், சானிடைசர் உள்ளிட்டவைகளை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், திட்ட இயக்குனர் கவிதா உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கரூர் மாவட்ட அனைத்து தாலுகா கிராமங்களுக்கும் 175 கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள், 3400 லிட்டர் கிருமி அழிக்கும் மருந்து, சானிடைசர் 200 லிட்டர் உள்ளிட்டவைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து பேசிய அவர், கரூர் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து மருந்துப் பொருள்கள், சேலத்திலிருந்து மளிகைப் பொருட்கள், மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறிகள் எடுத்துவர சம்பந்தப்பட்ட வாகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகின்றது. விரைவில் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து அவர், கரூரில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை. கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் தனிப்பிரிவில் வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் 21 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொலைக்காட்சி, யூடியூப் மூலம் பாடம் நடத்தப்படுகிறது -அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!