தமிழ்நாடு அரசு கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதில், மளிகை, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கலாம் எனவும், அதிலும், மளிகை உள்ளிட்ட கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டுமே கரூரில் திறக்கப்பட்டன. மேலும் இங்கு இயங்கும் சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தொழிலாளர்களை அழைத்து வரத் தனி வாகன ஏற்பாடு செய்துகொண்டு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில் பணிபுரியும் பலர் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் சொந்த இரு சக்கர வாகனங்களில் ஜாலியாக சுற்றி வருகின்றனர்.
கரூர் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இதுபோல் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை விசாரிக்கும் காவல்துறையினரிடம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். காவல்துறையினரும் உயர் அலுவலர்களிடம் இருந்து கட்டாய உத்தரவு வராத காரணத்தால், அவர்களை அனுமதிக்கின்றனர். இதனால், கரூரில் ஊரடங்கு அமலில் உள்ளதா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.