கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு காகித ஆலை செய்தித்தாள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் காலை மாலை இரவு என மூன்று வேளைகளில் நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 3ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே கொண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மே 11ஆம் தேதி மதிய வேளையில் தொழிற்சாலைக்குள் பணி செய்து கொண்டிருந்த வேலாயுதம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் அஜித் குமார் (34) இயந்திரம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இயந்திரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய அஜீத் குமாரை மீட்ட அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.