கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் தைப்பொங்கல் திருநாளில், புகழ்பெற்ற பூலாம்பாடி சேவல் கட்டு போட்டி நடப்பது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாட்டு சேவல்கள் வளர்ப்போர் இந்த போட்டிகளில் கலந்துகொள்வர். அப்படி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
ஆனால், நடப்பு ஆண்டில் சேவல் கட்டு போட்டி நடத்த நீதிமன்ற தடை விதித்திருப்பதால் காவல் துறை சேவல் கட்டு நடத்த அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில், விழா குழுவினர் மூன்று நாட்களுக்கு போட்டிகளை நடத்த தயாராகி அனைத்து பகுதிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சேவல் கட்டு போட்டியில் கலந்து கொள்ள ஏராளமானோர் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு பகுதியில் கூடினர். ஆனால், காவல் துறை அனுமதி மறுத்திருப்பதால் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான காவல் துறையினர் சேவல் கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சேவல் கட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விமர்சியாக தொடங்கியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அந்தந்த பகுதிகளில் அரசு உரிய அனுமதி அளித்து விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக தைப்பொங்கல் திருநாள் முதல் நாள் கரூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்வலசு பகுதியில் நடைபெறும் சேவல் கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம்” என்றனர்.