தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை ஒரு கருப்பு ஆடு! பாதயாத்திரை என கோடிக்கணக்கில் கொள்ளை - ஜோதிமணி குற்றச்சாட்டு

Jothimani vs Annamalai: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரையை காரணம் காட்டி நன்கொடை என்ற பெயரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Jothimani vs Annamalai
அண்ணாமலை குறித்து எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 10:13 PM IST

Updated : Nov 12, 2023, 2:04 PM IST

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கரூர் எம்பி ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு

கரூர்:கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (நவ.11) ஜோதிமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடத்துவதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் ஒன்றரை கோடி ரூபாயும், மதுரை மாவட்டத்தில் ஒருவர் 75 லட்சம் ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாஜகவின் யாத்திரை தமிழகத்தில் பெயரளவிலேயே நடைபெறுகிறது. இதனால்தான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வசூல்ராஜா என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். அண்ணாமலை, அரசு பதவியில் இல்லாமல் மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அண்ணாமலையில் பாதயாத்திரை கண் துடைப்பே: பாஜகவின் யாத்திரை என்பது வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படும் பாதயாத்திரையாக மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சில மீட்டர் தூரம் மட்டுமே யாத்திரை நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரை, தமிழ்நாட்டில் மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் எல்லோரும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு யாத்திரைகள் நடத்தி உள்ளனர்.

பாதயாத்திரைக்காக ஒன்றரை கோடி நன்கொடை?: ஆனால், அண்ணாமலையின் பாதயாத்திரையானது அப்படி நடைபெறுவதில்லை. மறுபுறம், யாத்திரைக்கு நன்கொடை என்ற பெயரில் ஒருவரிடம் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுள்ளதாக ஆடியோ வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியதாக ஆடியோவில் பேசிய நபர் பெயர் முத்துராமன்.

அவர் மத்திய அரசின் கீழ் செயல்படும் எம்.எஸ்.எம்.இ ப்ரோமோஷன் கவுன்சிலிங் அமைப்பின் தேசிய தலைவர் என போலியான பதவியையும், அரசு முத்திரையையும் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது தொடர்பாக, பாஜகவின் தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனன், கடந்த 2022 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே முத்துராமன் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் மோசமான நபர்தான் என்பது, பாரதிய ஜனதா கட்சியினர் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, இவரின் தலைமையில் இரண்டு முறை கவுன்சிலிங் கூட்டமும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நாராயண ரானே என்பவர், காணொளி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

கவுன்சிலிங் பொறுப்புக்கு 3 கோடி பேரம்?: போலி நிறுவனம் என்று தெரிந்தும், பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உதவியுடன் பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. கடந்த செப்.30 ஆம் தேதி சேலம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் அளித்த புகாரில், முத்துராமன் கவுன்சிலிங் பொறுப்பை வாங்கி தருவதற்கு, மூன்று கோடி ரூபாய் தன்னிடம் பேரம் பேசியதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், தனக்கு சார்ந்தவர்களிடம் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னிடம் பெறப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை திரும்பப் பெற்று தரவேண்டும் எனவும் கோவிந்தராஜ் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு, முத்துராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட முத்துராமனை ஜாமீனில் எடுக்க பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு தலைவராக உள்ள பால் கனகராஜ் இதில் ஈடுபட்டார். அவர் மத்திய அரசின் சீனியர் பேனல் அட்வகேட் பொறுப்பும் வகித்து வருகிறார். பாஜக வழக்கறிஞர் பிரிவில் உள்ள ஒரு நபர், முத்துராமனை ஏன் ஜாமீனில் எடுக்க வேண்டும்? சிவகங்கை மாவட்டத்தில் எத்தனை கிலோமீட்டர் தொலைவு அண்ணாமலை யாத்திரை நடத்தினார்.

யாத்திரை கொள்ளையடிக்கும் அண்ணாமலை?: குறைந்தபட்சம் மாவட்டம் முழுவதும் 5 கிலோமீட்டர் தொலைவு கூட அண்ணாமலை நடந்து சென்றிருக்க மாட்டார். அப்படிப்பட்ட யாத்திரைக்கு, ஒரே ஒருத்தர் ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இம்மாதிரியான யாத்திரையை நடத்தி, மிகப்பெரிய கொள்ளையில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.

கரை படிந்த கருப்பு ஆடு அண்ணாமலை; ஜோதிமணி சாடல்:இதை நான் மட்டும் கூறவில்லை. ஏற்கனவே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் யாத்திரைக்காக பணம் பறிக்கப்பட்டு உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நான் முன்பே கூறியதைப் போல, கர்நாடக மாநில காவல்துறையில் ஒரு கருப்பு ஆடாக, கரை படிந்த நபராக திகழ்ந்தவர் தான் அண்ணாமலை. தற்போதும் அதே பாணியை தான், பாஜக மாநில தலைவராக பதவி ஏற்ற பின்னும் செய்கிறார்.

யாத்திரையின் நடுவே வெளிநாட்டு பயணம் எதற்கு?:தமிழகத்தில் அரசு பதவியில் இல்லாமலேயே, நன்கொடை என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்ற அரசியல் கட்சியின் யாத்திரைகளில் ஓரிரு நாட்கள் விடுமுறை வழங்கப்படலாம். ஆனால் அண்ணாமலை, யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? ஒரு மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வெளிநாடுகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒரு கொள்ளைக் காடாக அண்ணாமலையும், அண்ணாமலை சார்ந்த கும்பலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

போலியான பெயரில் எம்.எஸ்.எம்.இ. கவுன்சில்; காவல்துறையில் வழக்கு:முத்துராமன் போன்ற நபர்கள், அண்ணாமலையின் துணையின்றி சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க முடியாது. மிக நிச்சயமாக அண்ணாமலைக்கு இந்த முறைகேடு சம்பவத்தில் தொடர்புள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.எம்.இ. கவுன்சில் என போலி அரசு நிறுவனம் நடத்திய முத்துராமன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த புகாரை காவல் நிலையத்தில் அளித்தவர்களில் ஒருவர், பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, கடந்த முறை செய்தியாளர் சந்திப்பில் நான் கூறியதைப்போல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எந்த அரசு பதவியிலும் இல்லை. ஆனால், அவருக்கு மாதம் ரூ.25 லட்சம் செலவில் இசட் பிரிவு பாதுகாப்பு (Z Section Security) அளிக்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் வரை அரசு சார்பில் செலவிடப்படுகிறது.

இசட் பாதுகாப்பு படை, அண்ணாமலையின் திரை மறைவு நடவடிக்கைகளை பாதுகாக்கவும், மக்கள் கண்களில் இருந்து மறைக்கவும், அவரது குற்றங்கள் வெளிப்படாமல் இருக்கவும் மட்டுமே பணியமர்த்தப்பட்டு இருக்கிறது. எந்த விதத்திலும் தகுதி இல்லாத அண்ணாமலை போன்றோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், முத்துராமன் போன்ற நபர்கள் முறைகேடாக பணம் வசூலித்த குற்றச்சாட்டில், தமிழக பாஜக தலைவருக்கும், மத்திய அமைச்சருக்கும் பங்கு இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சிறு குறு தொழில் நிறுவன முதலாளிகளை மிரட்டி பணம் பறித்த கும்பல் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மக்களவைத் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அமைய காரணம் அதிமுக, பாஜக தான் என கூறிவரும் நிலையில், கரூர் மக்களவை உறுப்பினர் என்ற வகையில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறைக்கு என்னுடைய சொந்த முயற்சியில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க:"மணலை கயிறாக திரிக்கவும் முடியாது; பெரியார் சிலையை அகற்றவும் முடியாது" - திருச்சியில் திருமாவளவன் அதிரடி!

Last Updated : Nov 12, 2023, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details