கரூரை அடுத்த தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சபரி முடிகார தெரு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (19), கரூர் - அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் இந்நிலையில், நேற்றிரவு இவருக்கு அறிமுகமான புதிய நண்பர்களுடன் தாந்தோணி மலை பகுதியில் உள்ள அசோக் நகரில் மணிகண்டன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் மணிகண்டனுக்கும் அவரது நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், மது அருந்தியவர்கள் மணிகண்டனை மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டனை அவருடன் மது அருந்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து அடையாளம் நபர்கள் தப்பியோடினர். உயிரிழந்த மணிகண்டனின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மதுபோதையில் கல்லூரி மாணவனை கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பணத்தைக் கட்டினால் ஜாமின்: கந்துவட்டி வசூலித்தவருக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம்!