உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கான அறிகுறிகளாக கருதப்படும் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதும் இல்லாமல், தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க ஏதுவாக கரூர் நகரத்தில் அமைந்துள்ள, அரசு மருத்துவமனையில் (பழைய அரசு தலைமை மருத்துவமனை) 'சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம்' அமைக்கப்பட்டு உள்ளது.
சித்த மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே பிரத்யேக பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவிற்காக 84 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 55 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று (21.08.2020) வரை 140 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.
அந்த சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் இன்று ஆய்வு செய்தார்.
மேலும், அங்கிருந்த மருந்துவர்களிடம் கலந்துரையாடிய அவர் வரும் காலத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்பட்டால் கூடுதலான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
தற்போது சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் கூடுதலாக 80 படுக்கைகள் தயார் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்துவருவது கவனிக்கத்தக்கது.