கரூர்: ஆடி மாதப் பிறப்பு என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாகவும், விவசாயிகள் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடப்பது வழக்கம். கரூரில் குறிப்பாக ஆடி மாதப் பிறப்பில் அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் வினோத வழிபாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் வழிபாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் ஈடுபட்டனர். இதற்காக தேங்காய் வாங்கி அதை சுத்தப்படுத்தி தேங்காயில் உள்ள மூன்று கண்ணில் ஒரு கண்ணில் துளையிட்டு, தண்ணீரை வெளியேற்றி அதன் வழியாக வெல்லம், பச்சரிசி, எள்ளு உள்ளிட்டவற்றை போடுவார்கள்.
தேங்காய் மீது மஞ்சள் குங்குமம் பூசி அந்தத் துளையில் நீளமான குச்சி கொண்டு சொருகி, பின்னர் தீயிலிட்டு தேங்காயை நன்றாக சுட்டு அம்மனுக்கு வழிபாடு செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.