கரூர்:கரூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர், ஆசிரியைகளுக்குப் பாராட்டு விழா தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் புலியூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, நல்லாசிரியர் விருதுபெற்ற 10 ஆசிரியர், ஆசிரியைகளுக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 777 உழவர்கள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்குவது இது முதன்முறை. நடப்பு நிதியாண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடக்கவிருக்கிறது. அதில் மின்வாரிய அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நிலக்கரி விவகாரத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. நிலக்கரி காணாமல்போன விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.