மரபை மீறி அதிமுக உறுப்பினர்கள் செயல்படுவதாக மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆவேசம் கரூர்:கரூர் மாநகராட்சி கூட்டம் மே 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து கூட்டம் ஜூன் 26 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 26) கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் காலை 11 மணிக்கு, மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது.
அதில் அதிமுகவைச் சேர்ந்த கரூர் மாநகராட்சி 14வது வார்டு உறுப்பினர் சுரேஷ் தனது வார்டு பகுதியில் அமைந்துள்ள எஸ். வெள்ளாப்பட்டி பகுதியில், மாநகராட்சி சார்பில் குப்பை அள்ளியதாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல 11வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் தினேஷ்குமார், 3வது வார்டு பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள குகை வழி பாதையில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்றுவதற்கு 45,000 செலவுத்தொகை காண்பிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
மாமன்ற கூட்டப் பொருளில் இல்லாத பொருள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்க முடியாது என்று மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கூறியதை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கும் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். இருதரப்பினரும் மாறி மாறி பேசியதால் மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.
கரூர் மாநகராட்சி கூட்டத்தின் மரபை மீறி அதிமுக உறுப்பினர்கள் கூட்ட பொருளில் உள்ள விவாதங்களை மேற்கொள்ளாமல், தொலைக்காட்சி ஊடகங்களில் தங்கள் பெயர் வர வேண்டும் என கூச்சல் குழப்பம் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கூறினார்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, மாமன்றத்தில் புதிதாக ஒரு கேள்வி எழுப்புவதற்கு மேயரின் அனுமதியைக் கட்டாயம் அதிமுக உறுப்பினர்கள் பெற வேண்டும் என்ற விதி தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் கூச்சல் குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என அதிமுகவினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான திமுக உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சரவணன் உள்ளிட்டோர் அதிமுக உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்தடுத்து கூட்டத்தில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், "அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூரில் போடாத சாலைக்கு தற்போது அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ள சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் நிறுவனம் அதிகாரிகள் துணையுடன் கையாடல் செய்வததை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார்.
அதுபோல தான், கரூர் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களை, திமுகவினர் பேச அனுமதிப்பது இல்லை. கூட்ட பொருளில் உள்ளது குறித்து கேள்வி எழுப்பினாலும், அடாவடியாக திமுக உறுப்பினர்கள் எழுந்து தகாத வார்த்தைகளில் பேசி மாமன்ற கூட்டத்தில் கூச்சல் எழுப்புகின்றனர். இவை அனைத்துக்கும் மக்கள் சரியான பதிலடி அளிப்பார்கள்” என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க:பொறியியல் கட்-ஆப்பில் முதலிடம்: மருத்துவம் படிக்க ஆசை..! பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி விருப்பம்